கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்- சுப பலன்களைப் பெறப் போகும் ராசிகள்!

 

நவக்கிரகங்களில் முழு சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், ஒரு ராசியில் பன்னிரண்டு மாதம் முதல் பதிமூன்று மாதங்கள் வரை சஞ்சரிப்பார். அவ்வகையில் இப்போது மிதுன ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், அந்த ராசியில் இருந்து வெளியேறி கடக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இரண்டாயிரத்து இருபத்தி ஆறாம் ஆண்டு மே மாதம் இருபத்தி ஆறாம் தேதி (26.5.2026) செவ்வாய்க்கிழமை பகல் பதினொன்று மணி எட்டு நிமிட அளவில், புனர்பூசம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடக ராசியில் குரு பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்க உள்ளதால், இந்த குருப்பெயர்ச்சி ஆன்மிக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உச்சம் பெறும் குருவின் புனிதமான பார்வையானது விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பதிகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப, குரு பகவான் தனது பார்வை பலத்தால் இந்த ராசிகளுக்குப் அளப்பரிய நற்பலன்களை அள்ளி வழங்கவுள்ளார். இதனால் இந்த ராசியினருக்குத் தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும், தொழிலில் அபார முன்னேற்றமும், வருமான உயர்வும், சிறப்பான பொருளாதார வளர்ச்சியும் கூடும். குரு பகவான் உச்சம் பெறும் இந்த வேளையில் நாட்டிலும், வீட்டிலும் சுபநிகழ்ச்சிகள், ஆலயக் குடமுழுக்கு விழாக்கள், திருப்பணிகள் போன்றவை மிக அதிக அளவில் நடைபெறும்.

கடக ராசியில் உச்சம் பெறும் குரு பகவான், இரண்டாயிரத்து இருபத்தி ஆறாம் ஆண்டு அக்டோபர் இருபதாம் தேதி மீண்டும் சிம்ம ராசிக்கு அதிசாரமாகச் சென்று, பின்னர் இரண்டாயிரத்து இருபத்தி ஏழாம் ஆண்டு பிப்ரவரி பதிமூன்றாம் தேதி முதல் மீண்டும் கடக ராசிக்கு வந்து தனது பயணத்தைத் தொடர்கிறார்.

இதற்கிடையே, கடக ராசிக்கு ஜென்ம குருவாக வரும் குரு பகவான், அர்த்தாஷ்டம குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக தனுசுவிற்கும், விரய குருவாக சிம்மத்திற்கும், ரோக குருவாக கும்பத்திற்கும் வருகிறார். எனவே, இந்த ராசிகளில் பிறந்தவர்கள் தங்களது சுய ஜாதக அடிப்படையில் உரிய ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டு, சான்றோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசிகளைப் பெற்றால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும்.

இந்த குருப் பெயர்ச்சியின் விளைவாக நாட்டில் பல்வேறு நல்ல நிகழ்வுகள் நடைபெறும் என பஞ்சாங்கம் கணிக்கிறது. உச்சம் பெற்ற குரு என்பதால் மக்கள் அச்சமில்லாமல் நிம்மதியாக வாழ அரசாங்கம் உரிய வழிவகைகளைச் செய்துகொடுக்கும். தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாக உயரும், அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுகளின் விலை ஏற்றமும் இறக்கமுமாகவே இருக்கும். விளையாட்டுத்துறை, விஞ்ஞானம், மருத்துவம், கலைத்துறை, ஜோதிடத்துறை, ஆன்மிகத்துறை, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் கணினித் துறைகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மழைவளம் சிறப்பாக அமைந்து விவசாயம் தழைக்கும்.

அரசியல் களத்தைப் பொறுத்தவரை செவ்வாய், சனி சேர்க்கை மற்றும் பார்வைக் காலங்களில் சில இயற்கை சீற்றங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அரசியல் களத்தில் சிறு சிறு பிரச்சினைகளும், உட்கட்சிப் பூசல்களும் ஏற்பட்டு தற்காலிகக் கலக்கத்தை உருவாக்கலாம். இருப்பினும், அரசியல் களத்தில் உள்ள பெண்களுக்குப் புதிய பொறுப்புகளும், முக்கியத்துவமும் தேடி வரும். கலைத்துறையில் பல இளம் கலைஞர்கள் புதிதாக உருவாகிப் புகழின் உச்சிக்குச் செல்வர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இந்த குரு பெயர்ச்சி ஜூன் மாதம் இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.