JUST IN: சாக்லேட் சாப்பிட்ட 18 அரசுப் பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஒன்றில், சக மாணவன் கொடுத்த பிறந்தநாள் சாக்லேட்டுகளைச் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவர்கள் 18 பேருக்கு அடுத்தடுத்து திடீர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் இன்று காலை வழக்கம் போல் வகுப்புகள் தொடங்கியுள்ளன. அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால், அவர் தனது சக வகுப்புத் தோழர்களுக்குக் கொண்டாட்டமாகச் சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார்.
சாக்லேட்டை வாங்கிச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதில் சில மாணவர்கள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததால் பள்ளியில் பெரும் பதற்றம் நிலவியது.
மாணவர்களின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட 18 மாணவர்களையும் மீட்டுச் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்குத் தயாராக இருந்த மருத்துவர்கள் குழு, மாணவர்களுக்கு 'ஃபுட் பாய்சனிங்' எனப்படும் உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டதை உறுதி செய்து, உடனடியாக குளுக்கோஸ் மற்றும் அவசரச் சிகிச்சைகளை அளித்தனர். அனைத்து மாணவர்களும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் செஞ்சி போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மாணவர் விநியோகித்த சாக்லேட்டுகள் காலாவதியானவையா, அல்லது கடைகளில் தரம் குறைந்த போலி சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சாக்லேட் சாப்பிட்டுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் பலரும் பதற்றத்துடன் மருத்துவமனையில் குவிந்ததால் செஞ்சி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.