JUST IN: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று மாலை அறிவிப்பு!
இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற உள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் என மொத்தம் 5 மாநிலங்களில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. குறிப்பாக மேற்கு வங்கம்: மே 7, தமிழ்நாடு: மே 10, அசாம்: மே 20, கேரளா: மே 23, புதுச்சேரி: ஜூன் 15 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. இந்த தேதிகளுக்கு முன்னதாக புதிய அரசுகள் அமைய வேண்டும் என்பதால், தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே முடித்துவிட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர், கடந்த சில வாரங்களாகத் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்று தேர்தல் தயார் நிலை குறித்து விரிவான ஆய்வுகளை நடத்தினர். அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இன்று மாலை தேர்தல் அட்டவணை வெளியாகிறது.
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகவும், அசாமில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே, சம்பந்தப்பட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். இதன் மூலம் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ அல்லது அதிகாரிகளை இடமாற்றம் செய்யவோ முடியாது. அனைத்து அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
தேதி அறிவிக்கப்பட உள்ளதால் தமிழகத்தில் அரசியல் களம் உச்சகட்டப் பரப்பரப்பை எட்டியுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி மற்றும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் என மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடுகள் இன்னும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.