#JUST IN: புதுச்சேரியில் ஏப்.5-ல் விஜய் பிரச்சாரம் - காலாப்பட்டு முதல் உப்பளம் வரை... முழு பயண விவரம்! 

 

தவெக தலைவர் விஜய், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் ஏப்ரல் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்கான அனுமதி கோரி தவெக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரியின் முக்கியப் பகுதிகளில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்து, மக்களிடையே விஜய் வாக்குச் சேகரிக்கவுள்ள நிலையில், அவரது உத்தேசப் பயண விவரங்கள் வெளியாகி உள்ளது. காலை 9:30 மணி: காலாப்பட்டு நுழைவாயில் (பிரச்சாரத் தொடக்கம்), காலை 10 மணிக்கு முதியால்பேட்டை மணிகுண்டு, காலை 10:30 மணி: அதிதி ஹோட்டல் சிக்னல், காலை 11 மணி: உப்பளம் வாட்டர் டேங்க் அருகில்.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்தப் பிரச்சாரப் பயணம், புதுச்சேரியில் உள்ள இளைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இன்று சென்னையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்த கையோடு, அடுத்தகட்டமாகப் புதுச்சேரிக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

​​​​​​​ஏற்கனவே தமிழகத்தில் தனது பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக விஜய் புகார் அளித்திருந்த நிலையில், புதுச்சேரி தேர்தல் ஆணையம் இந்த ஒரு நாள் பிரச்சாரப் பயணத்திற்கு எப்போது அனுமதி வழங்கும் என்பதே தவெக தொண்டர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.