தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம் - நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரை!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சோக மரணங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் டாஸ்மாக் கடைகளின் செயல்பாடு குறித்துப் பல்வேறு முக்கியப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எதிர்காலத்தில் படிப்படியாகப் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. நீண்ட காலமாகத் கோரிக்கையாக இருந்துவரும் கள் இறக்குவதற்கு உரிமம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயப் பயன்பாட்டைத் தடுத்து, கலப்படமற்ற மதுவை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை 50 சதவீதம் வரை குறைத்து, அவற்றை டெட்ரா பேக்குகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாற்றியமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கள்ளச்சாராயத் தடுப்பு மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோகுல்தாஸ் ஆணையம் அளித்துள்ள இந்தப் பரிந்துரைகள் தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.