மகனின் பிறந்தநாளுக்கு நூடுல்ஸ் வாங்க சென்ற தாய் விபத்தில் பலி: ஆதரவின்றி  தவிக்கும் குழந்தைகள்!

 

திருச்சி மாவட்டம் கல்லக்குடி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது ஷீலா, மகனின் பிறந்தநாளுக்கு நூடுல்ஸ் வாங்கச் சென்றபோது நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டல் தொழிலாளியான ஷீலாவின் கணவர் மணி ஏற்கனவே உயிரிழந்த நிலையில், அவருக்கு 17 வயது மகள் மற்றும் தினேஷ் (14), அஜய் (11) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

இளைய மகன் அஜயின் பிறந்தநாளையொட்டி நூடுல்ஸ் வாங்கித் தருமாறு தாயிடம் கேட்டுள்ளார். இதையடுத்து இரவு ஷீலா, அஜய்யுடன் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, கல்லக்குடி காமராஜபுரத்தைச் சேர்ந்த 27 வயது பாலகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஷீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கால் முறிந்து படுகாயமடைந்த அஜய் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த பாலகுமார் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பாலகுமாரும் உயிரிழந்தார்; இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணியாற்றி வந்தவர் ஆவார். பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அரசு உதவி வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லக்குடி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.