கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்... அதிகாரிகளே காரணம்... அறிக்கை தாக்கல்!
கடந்த 2024ம் ஆண்டு கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் தனது இறுதி அறிக்கையை இன்று சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்தது.
இந்த இறுதி அறிக்கையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் கடுமையான அலட்சியமும் கடமை தவறிய போக்கும் தான் இந்தத் துயரமான உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக வழிவகுத்துள்ளன என்று நீதிபதி கோகுல்தாஸ் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இன்மையும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதும் இத்தகைய பெரும் சோகத்திற்கு வழிவகுத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை தற்போது மிகுந்த விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.