“கமல்ஹாசன் சுயநலவாதி!” - தனக்கு மட்டும் பதவி.. உழைத்தவர்களை விட்டு விட்டார்” - வானதி சீனிவாசன்!

 

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து வீணாகப் போனதற்கு அதன் தலைவர் கமல்ஹாசனின் சுயநலமே காரணம் எனச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் வானதி சீனிவாசன் பேசுகையில், "2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்குப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்து அவருக்காக உழைத்தனர். ஆனால், கமல்ஹாசன் தனது சுயநலத்திற்காகத் தான் மட்டும் மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெற்றுக்கொண்டு, அவரை நம்பி வந்த தொண்டர்களை அம்போ என விட்டுவிட்டார்."

"கடந்த முறை கோவை தெற்கு தொகுதி மக்கள் கமல்ஹாசனுக்குச் சரியான பதிலடி கொடுத்தார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது கட்சிக்கும், தொண்டர்களுக்கும் விசுவாசமாக இல்லாத ஒருவரால் எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிதாகக் கட்சி ஆரம்பிப்பவர்கள் மற்றும் அவர்களை நம்பிச் செல்பவர்களுக்கு மக்கள் நீதி மய்யமே ஒரு சிறந்த உதாரணம் என்று வானதி சீனிவாசன் சாடினார். "தன்னுடைய கொள்கை மற்றும் அரசியலில் சமரசம் செய்து கொண்டு, பதவியே குறிக்கோள் எனப் பயணிப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். ஒரு கட்சி எப்படித் தொடங்கி வீணாகப் போகும் என்பதற்கு மநீம சாட்சியாக நிற்கிறது" என அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனை குறிவைத்து பாஜக தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக, கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளைத் தவிக்கவிட்டுவிட்டுத் தனக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதை வானதி சீனிவாசன் முன்னிலைப்படுத்தியுள்ளார்.