விஜய் போட்டியிடும் தொகுதிகளில் களமிறங்கும் கமல்... தவெக-வுக்கு செக் வைக்க மாஸ்டர் பிளான்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது 'நட்சத்திரப் போராக' உருவெடுத்துள்ளது. தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில், அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய், இந்தத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது செல்வாக்கைக் கட்டுப்படுத்த திமுக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில், நட்சத்திரப் பேச்சாளரான கமல்ஹாசனை அங்கு களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசன், சென்னையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வரும் 17ம் தேதி கமல்ஹாசன் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அங்குள்ள திமுக வேட்பாளருக்காக அவர் வாக்கு சேகரிக்க உள்ளார். அதே போன்று பிரசாரம் முடிவடைய ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், ஏப்ரல் 20ம் தேதி திருச்சியில் முகாமிட்டு விஜய்க்கு எதிராகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
திரையுலகில் விஜய்க்கு முன்னோடியாகவும், மூத்த கலைஞராகவும் இருக்கும் கமல்ஹாசன், அரசியலில் அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்வது தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம் மற்றும் அவரது பிரசார ரத்துகள் குறித்து கமல் ஏதேனும் விமர்சனங்களை முன்வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய்யின் இளைய தலைமுறை வாக்கு வங்கியை, கமலின் பேச்சாற்றல் மூலம் திமுக பக்கம் திருப்ப முடியுமா? என்ற கோணத்தில் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
ஒரே திரையில் இருவரையும் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு, தேர்தல் களத்தில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக நிற்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. கமலின் வருகை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.