கமல்ஹாசனின் திடீர் ‘யு-டர்ன்’ - மநீம விருப்பமனு கட்டணம் திரும்பத் தரப்படும் - தொண்டர்கள் போராட்டத்திற்குப் பணிந்ததா தலைமை?!

 

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த நிர்வாகிகளின் கட்டணம் குறித்து நிலவிய சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானபோது, மநீம சார்பில் போட்டியிட ஆர்வமுடன் சுமார் 60 நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இதற்காகத் தலா ரூ.50,000 வீதம் மொத்தம் 30 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

கட்சி தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டதும், பணத்தைத் திரும்பத் தருமாறு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், "அந்தப் பணம் கட்சி வளர்ச்சி நிதிக்குச் சென்றுவிட்டது, திரும்பத் தர முடியாது" என முதலில் அறிவிக்கப்பட்டதால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. விருப்பமனு அளித்தவர்கள் செலுத்திய கட்டணத்தை நாளை (ஏப்ரல் 9) முதல் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 16-ம் தேதிக்குள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம தலைமை அலுவலகத்தில் உரிய ஆவணங்களைக் காண்பித்துத் தங்களது பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இணைந்து ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெற்றுள்ள கமல்ஹாசன், இந்தத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியைச் சரிசெய்யும் விதமாகவே, இந்த நிதியைத் திரும்ப வழங்கும் முடிவை மநீம தலைமை எடுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.