நாளை முதல் 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு... முதல்வர் விஜய் தொடங்கி வைப்பு!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் அரசு நடுநிலைப்பள்ளியில் நாளை (செப்.22) நடைபெறுகிறது.முதல்வர் விஜய் காலை 8.30 மணியளவில் கலந்து கொண்டு விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் திருவான்மியூர் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தற்போது நடுநிலைப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.இந்த விரிவாக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைய உள்ளனர். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு தயாரித்து வழங்கப்பட உள்ளது. பிற நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான அரசு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், செப்.22 அன்று மாநில அளவில் இதற்கான தொடக்கம் நடைபெறுகிறது. செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அந்த இரு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் அன்றைய தினம் விரிவாக்கம் தொடங்கப்படும் என அரசுத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் காலை உணவை தவறவிடாமல், ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பெறுவதற்கான நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.