ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் பணம் ரூ.1.50 கோடி கொள்ளை! மேலாளர், ஓட்டுநர் மீது தாக்குதல்

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் வசூலான ரூ.1.50 கோடி பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை மேலாளர் ஒருவர் நேற்று இரவு காரில் எடுத்துச் சென்றுள்ளார். அவருடன் ஓட்டுநரும் இருந்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்றபோது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் காரை வழிமறித்துள்ளது.

தொடர்ந்து, காரில் இருந்த மேலாளர் மற்றும் ஓட்டுநரை அந்த கும்பல் தாக்கியுள்ளது. பின்னர் இருவரையும் கட்டுப்படுத்திவிட்டு, பணம் இருந்த காரிலேயே மர்ம நபர்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளனர். அதன்பிறகு காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, அதிலிருந்த ரூ.1.50 கோடி பணத்துடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், மர்ம நபர்களின் அடையாளங்களைக் கண்டறிந்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.