கந்தசஷ்டி திருவிழா... திருப்போரூர் முருகன் கோவிலில் கொடி அறுந்து விழுந்ததால் பரபரப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா நேற்றுக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடக்கத்தில் கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கொடி திடீரென அறுந்து கீழே விழுந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று காலை 5:30 மணியளவில் கோவில் அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கொடியேற்ற நிகழ்வை நடத்தினர். கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த போது, கயிற்றின் தரம் குறைவாக இருந்ததன் காரணமாக எதிர்பாராதவிதமாக அது திடீரென அறுந்து கீழே விழுந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகத்தினர் உடனடியாகச் செயல்பட்டு ஏணி மூலம் புதிய கொடிக்கயிற்றைக் கொடிமரத்தில் பிணைத்தனர். தொடர்ந்து சிறப்புப் பரிகார பூஜைகள் மற்றும் பரிகார அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்னர், சுமார் அரை மணி நேரம் தாமதமாக மீண்டும் முறைப்படி கொடி ஏற்றப்பட்டது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 6 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இத் திருவிழாவில் தினமும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் முருகப்பெருமான் பல்லக்கு, ஆட்டுக்கடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மேளதாளங்கள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. சூரசம்ஹாரத்தை தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை மாலை ஸ்ரீதெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டுத் தினமும் திருக்கோவிலில் லட்சார்ச்சனை பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகளைக் கோவில் நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து செய்து வருகின்றன.