சாதித்த கனிமொழி... கதறும் காங்கிரஸ்... ஸ்டாலினை சந்திக்க சென்னை வரும் தேசிய தலைவர்கள்!

 

திமுக கூட்டணியில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் திடீரென தேர்தல் முடிவுகளுக்குப் பின் 2 அமைச்சர் சீட்களுக்காக வெளியேறிய காங்கிரஸ் இப்போது தேசிய அரசியலில் தனித்து விடப்பட்டுள்ளது தலைவர்களை பதற செய்துள்ளது. இது நாள் வரையில் பாஜக கொண்டு வரும் மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல்கள் நீடித்து வந்த நிலையில், திமுகவின் திடீர் பாஜக ஆதரவு நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியை நாடாளுமன்றத்தில் தனித்து விடப்பட்டது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த பாஜக மசோதா ஆதரவு நிலைபாடு குறித்து கனிமொழி, ஸ்டாலினிடம் அழுத்தம் கொடுத்து, தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து உறுதியாக நின்றதாக அறிவாலயம் வட்டாரங்கள் உறுதிபடுத்துகின்றன. இங்கே தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்த அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சி எம்.பி.க்களின் இருக்கைகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கனிமொழி தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் தர ஆரம்பித்து விட்டார். அதன் தொடர்ச்சியாக  மம்தாவுடனான சந்திப்பு, தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பது என்று தற்போது அதன் தலைவர்களை பதற்றமடைந்து சென்னை வர வைத்துவிட்டார் என்கிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காகக் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று சென்னை வந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். இவர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களும் சென்னை வரவுள்ளதால் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை (நவம்பர் 30) தொடங்க உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் சென்னை புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிய பிறகு, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) தலைவர் சரத் பவாரை மும்பையில் சந்தித்துப் பேசவும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை 50 சதவீதம் உயர்த்தவும், தமிழ்நாட்டின் தற்போதைய விகிதாச்சாரப் பங்கைக் குறையாமல் பாதுகாக்கவும் வகை செய்யும் அரசியலமைப்பு (132-வது திருத்த) மசோதாவுக்குத் திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இம்மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் சூழலில், திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யக் கோரியும், நாளைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த வியூகம் குறித்தும் மு.க. ஸ்டாலினுடன் இத்தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.