முத்து நகரம், கொலை நகரமாகிறது... கருணை காட்டுங்க முதல்வரே... கனிமொழி ஆவேசம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நிகழும் கொலைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தமிழக முதல்வர் விஜய்யின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தை திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார். மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைகளால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகத் தெரிவித்த அவர், காவல்துறையைச் சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய ஒருவரிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்யை வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியை ‘முத்துநகரம்’ என்பதற்குப் பதிலாக ‘கொலை நகரம்’ என்று அழைக்கும் நிலை உருவாகி வருவதாகவும் கனிமொழி தனது பதிவில் விமர்சித்துள்ளார்.
கொலை வழக்கில் உறவினர் கைது
இதற்கிடையே, சசிகலா கொலை தொடர்பாக அவரது தங்கை மகன் விக்னேஷ் என்ற முனீஷை போலீசார் கைது செய்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார். அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடியில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த அரசியல் விவாதமும் தீவிரமடைந்துள்ளது.