₹14.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்... சென்னை விமான நிலையத்தில் இளம்பெண் கைது!

 

 

 

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.14.50 கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கஞ்சையைக் கடத்தி வந்த வடமாநிலப் பெண் ஒருவரைச் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தாய்லாந்து சென்று திரும்பிய 35 வயதுடைய வடமாநிலப் பெண் ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த  , அவரை தனியாக அழைத்துச் சென்று தீவிர சோதனை நடத்தினர். அந்தப் பெண்ணின் பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, தாய்லாந்தின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலங்களுக்குள் பல பொட்டலங்களில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த உயர்ரகப் பதப்படுத்தப்பட்ட கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ₹14.50 கோடி என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். கஞ்சாவைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 35 வயது பெண்ணைக் கைது செய்தனர்.

தாய்லாந்தில் இந்த கஞ்சாவை அவருக்குக் கொடுத்தது யார், சென்னையில் இந்த போதைப் பொருளை யாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தார் என்பது குறித்தும், இதன் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.