வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய 10 அடி மலைப்பாம்பு... வைரல் வீடியோ!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வாழைத்தோப்பில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய 10 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்கள் லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பூதப்பாண்டி பகுதியிலுள்ள வாழைத்தோப்பு ஒன்றில் பயிர்களைப் பாதுகாப்பதற்காக வலை விரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரையத் தேடி வந்த சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த வலையில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தது.
இதனைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். மலைப்பாம்பிற்கு எவ்விதக் காயமும் ஏற்படாத வகையில் கத்தரிக்கோல் மற்றும் கத்திகளின் உதவியுடன் வலையை மிகக் கவனமாக வெட்டி, பாம்பை பத்திரமாக விடுவித்தனர்.
பின்னர் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பைப் பெற்றுக்கொண்டு, அதற்கு முதலுதவி அளித்து அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். இளைஞர்களின் இந்தத் துரிதமான மற்றும் மனிதாபிமான செயலுக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன