டிசம்பர் 3ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை... கலெக்டர் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் டிசம்பர் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மு. பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 3-ம் தேதி வியாழக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் 12-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் அறிவிக்கப்படாததால், மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அவசர அரசு பணிகளைக் கவனிக்கும் வகையில் தேவையான பணியாளர்களுடன் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை, குமரி மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.