8 சவரன் போலி நகைகளை அடகு வைத்து ரூ.6 லட்சம் மோசடி... கேரள இளம்பெண் கைது!

 

 

கன்னியாகுமரி பகுதியில் உள்ள நகை அடகு கடையில் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.6 லட்சம் வரை மோசடி செய்ததாக கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண், குறிப்பிட்ட நகை அடகு கடையில் 8 சவரன் போலி தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் கடைக்கு ரூ.6 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதே கடைக்கு மீண்டும் வந்த இளம்பெண், மேலும் போலி நகைகளை அடகு வைக்க முயன்றுள்ளார். அப்போது அவர் கொண்டு வந்த நகைகள் மீது கடையின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நகைகளைச் சரிபார்த்தபோது அவை போலியானவை என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இணைந்து அந்தப் பெண்ணைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், இதேபோல் வேறு நகை அடகு கடைகளிலும் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.