கன்னியாகுமரி பரபரப்பு.. மாணவர்களைக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை - கல்வித்துறை விசாரணை!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததுடன், தனது கால்களையும் மசாஜ் செய்ய நிர்பந்தித்த தலைமை ஆசிரியை மீது கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களைக் கொண்டு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தனது கால்களை மசாஜ் செய்யக் கட்டாயப்படுத்தியதாகவும், பள்ளிக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததாகவும் அதிர்ச்சி புகார்கள் எழுந்தன. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியையிடம் நியாயம் கேட்டனர்.

பெற்றோரின் கேள்விகளுக்குத் தலைமை ஆசிரியை முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிப்பதும், பின்னர் தனது தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது போன்ற காட்சிகளும் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவியது. இச்சம்பவம் குறித்துப் பெற்றோர்கள் ஒன்றிணைந்து பள்ளி கல்வித்துறைக்கு உடனடியாகப் புகார் மனு அனுப்பினர்.

புகாரின் பேரில், மாவட்டக் கல்வி அதிகாரிகள் செல்லங்கோணம் அரசுத் தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.