காணி பழங்குடியின சமூகத்தில் முதல் சட்டப் பட்டதாரி! கன்னியாகுமரி இளம்பெண் இவாஞ்சலின் சாதனை!
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள கூவைக்காடு குக்கிராமத்தைச் சேர்ந்த காணி பழங்குடியின மாணவி ஒருவர் சட்டப்படிப்பை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.கூவைக்காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் காணி - உமா மகேஸ்வரி தம்பதியின் மகள் இவாஞ்சலின் (28). சிறுவயது முதலே கல்வியில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை பயின்றுள்ளார்.
தற்போது தனது சட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்த முதல் காணி பழங்குடியின மாணவி என்ற பெருமையை இவாஞ்சலின் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையைக் கொண்ட இந்த சமூகத்தைச் சேர்ந்த இவாஞ்சலின், சட்டம் பயின்று பட்டம் பெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
கல்வி மூலம் தங்களது சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினரும் உயர்கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகளில் முன்னேற முடியும் என்பதற்கு இவாஞ்சலினின் பயணம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டப்படிப்பை நிறைவு செய்த இவாஞ்சலினுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி சட்டக் கல்வியை நிறைவு செய்து பட்டம் பெற்றிருப்பது, அவரது குடும்பத்துக்கு மட்டுமின்றி காணி பழங்குடியின சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.