கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆவணித் திருவிழா 1008 திருவிளக்கு பூஜையுடன் நிறைவு!

 

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற மூன்று நாள் ஆவணித் திருவிழா கோலாகலமாக நிறைவடைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருவிழாவின் நாட்களில் தினமும் கணபதி ஹோமம், பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, சாயரட்சை தீபாராதனை மற்றும் அத்தாழ பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் முதல் நாள் மாலை ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட சுமங்கலி பூஜையும், இரண்டாம் நாள் திரளான பெண்கள் பங்கேற்ற பொங்கல் வழிபாடும் விமரிசையாக நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 1008 திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து தங்கரதத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் இறுதி நிகழ்வாக, கோவில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிச் கவுரவிக்கப்பட்டன. இரவு அத்தாழ பூஜையுடன் மூன்று நாள் திருவிழா நிறைவு பெற்றது. இந்தத் திருவிழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்தனர்.