கன்னியாகுமரிக்கு வந்தடைந்த புதிய சொகுசு படகு… விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதி!

 

 

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு புதிய சொகுசு படகு வந்தடைந்துள்ளது. ‘பெருந்தலைவர் காமராஜர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படகு, கோவாவில் கட்டப்பட்டு கடல் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

133 டன் எடை கொண்ட இந்தப் படகு 21 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் ஒரே நேரத்தில் 156 பயணிகளும், 6 முக்கியப் பிரமுகர்களும் பயணம் செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவசரகால வெளியேறும் வழிகள், சிசிடிவி கேமராக்கள், இரவு நேரப் பயணத்துக்கான விளக்குகள் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படகு தற்போது கன்னியாகுமரி பூம்புகார் படகுத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில் கூடுதல் படகுகள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் அறிவிக்கப்பட்ட மூன்று புதிய படகுகளில் முதலாவது படகு தற்போது வந்துள்ளது. மீதமுள்ள இரண்டு படகுகளும் அடுத்த ஒரு மாதத்திற்குள் வரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய படகின் வழக்கமான சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.