ரேஷன் அரிசி கடத்தலைத் தடுத்த அதிகாரிகள் மீது தாக்குதல், கொலை மிரட்டல் - கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

 

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற கும்பல், அதைத் தடுத்து நிறுத்திய தமிழகப் பறக்கும் படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத் தமிழக-கேரள எல்லை வழியாக மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உணவப் பொருட்கள் தடுப்புப் பிரிவு பறக்கும் படை அதிகாரிகள் அந்த வாகனத்தைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றனர். களியக்காவிளை வழியாகச் சென்ற மினி லாரி, கேரள எல்லையான இஞ்சிவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் அரிசி குடோனுக்குள் நுழைந்ததும், அங்கிருந்தவர்கள் உடனடியாகக் குடோனின் கதவைப் பூட்டினர்.

குடோனைச் சோதனையிட முற்பட்ட பறக்கும் படை அதிகாரிகளைத் தடுத்து நிறுத்திய கடத்தல் கும்பல், தமிழகக் குழுவில் இருந்த வருவாய் ஆய்வாளரைத் தாக்குதலுக்கு உள்ளாக்கியது. மேலும், அக்குழுவில் இருந்த பெண் அதிகாரி உட்பட மூவருக்குக் கடத்தல் கும்பல் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் தமிழ்நாடு மற்றும் கேரளக் காவல்துறையினருடன், கேரள வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடோனில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். இக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட குடோனை நடத்தி வரும் அலீம் என்பவரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தித் தலைமறைவான கடத்தல் கும்பலைத் தமிழ்நாடு மற்றும் கேரளக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.