கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு - ஊருக்குள் புகுந்த கடல் நீரால் வீடுகள் சூழ்ந்து பொதுமக்கள் அவதி!

 

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மற்றும் கடுமையான கடல் சீற்றம் காரணமாக, ராட்சத அலைகள் எழுந்து கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் திடீரெனக் கடல் நீர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துப் போய் விடிய விடிய உறங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

கடலின் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதே நிலை நீடித்தால் தங்கள் கிராமமே கடல் கோளாரால் வரைபடத்தில் இருந்து காணாமல் போய்விடும் என்று அப்பகுதி மக்கள் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சனைக்குத் தற்காலிகத் தீர்வுகள் எவையும் உதவாது என்பதால், கரையை ஒட்டி பலத்த சேதத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் நிரந்தரமான தடுப்புச் சுவரை அரசு உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்பதே அழிக்கால் கிராம மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.