விடுமுறை நாளில்  கன்னியாகுமரியில் அலைகடலென திரண்ட பக்தர்கள்... சூரிய உதயத்தை காண நள்ளிரவு முதல் காத்திருப்பு!  

 

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வார இறுதி நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் இன்று ஏப்ரல் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் குவிந்தனர். திரிவேணி சங்கமம் மற்றும் சூரிய உதயக் காட்சி முனையில் நள்ளிரவு முதலே காத்திருந்த மக்கள், அதிகாலையில் தோன்றிய சூரியனை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

சூரிய உதயத்திற்குப் பிறகு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய சுற்றுலா பயணிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டுகளிக்கப் படகுத் துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காலை 10 மணி நிலவரப்படி படகு சவாரி செய்ய சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா மற்றும் அரசு அருங்காட்சியகம் என கன்னியாகுமரியின் அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடற்கரைச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் காவல்துறையினர் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் கடற்கரைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.