கபில்தேவ் சாதனை சமன்... டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த மிட்செல் ஸ்டார்க் - உலக சாதனை முறியடிப்பு!
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (36), டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளைக் வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
டார்வினில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், வங்கதேசத் தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாமின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இச்சாதனையை மிட்செல் ஸ்டார்க் எட்டினார். தனது 106-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஸ்டார்க், இந்த விக்கெட்டின் மூலம் தனது டெஸ்ட் விக்கெட்டுகளின் எண்ணிக்கையை 434 ஆக உயர்த்தினார்.
இதன் மூலம் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரங்கன ஹேரத் (433 விக்கெட்டுகள் - 93 போட்டிகள்) படைத்திருந்த சாதனையை முறியடித்து, டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளராக முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விக்கெட்டின் மூலம், இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான கபில் தேவ் (434 விக்கெட்டுகள்) டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.