28 ஆண்டுகள்... 29 நாடுகள்... 50000 கி.மீ.! நடந்தும் நீந்தியும் தாயகம் திரும்பிய சாகச வீரர்!

 

 

உலகைச் சுற்றி வர வேண்டும் என்ற இலக்குடன் 28 ஆண்டுகளுக்கு முன்பு பயணத்தைத் தொடங்கிய பிரிட்டிஷ் சாகச வீரர் கார்ல் புஷ்பி, 57, தனது நீண்ட பயணத்தை நிறைவு செய்து இங்கிலாந்தில் உள்ள சொந்த ஊரான ஹல் நகருக்குத் திரும்பியுள்ளார்.

allowfullscreen

முன்னாள் ராணுவ வீரரான அவர், 1998-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் இருந்து ‘கோலியாத் எக்ஸ்பெடிஷன்’ என்ற பெயரில் பயணத்தைத் தொடங்கினார். மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தி பயணத்தைத் தொடரக் கூடாது; இலக்கை அடையும் வரை சொந்த நாட்டுக்குத் திரும்பக் கூடாது என இரண்டு விதிகளையும் வகுத்துக் கொண்டார்.

தென் மற்றும் வட அமெரிக்கா, ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளைக் கடந்து அவர் பயணம் செய்தார். அலாஸ்கா - ரஷ்யா இடையிலான பெரிங் நீரிணை, காஸ்பியன் கடல், இங்கிலீஷ் சேனல் உள்ளிட்ட சவாலான பகுதிகளையும் நடந்தும் நீந்தியும் கடந்தார்.

விசா சிக்கல்கள், நிதி நெருக்கடி, வானிலை பாதிப்புகள், கொரோனா பெருந்தொற்று மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக 12 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்ட பயணம் 28 ஆண்டுகளாக நீண்டது. சுமார் 50 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை முடித்து நவம்பர் 2-ம் தேதி ஹல் நகரை அடைந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தாயையும், இதுவரை நேரில் சந்தித்திராத 12 வயது பேத்தியையும் சந்தித்தது அவருக்கு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.