கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் - கர்நாடக அமைச்சர் நேரில் வரவேற்பு!
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி.எம்.விஜய், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று இன்று சிறப்புச் சாமி தரிசனம் செய்தார். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் செயலலிதா ஆகியோர் அடிக்கடி வந்து வழிபட்ட இந்த ஆன்மீகத் தலத்திற்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தது, அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
கோவிலுக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் தரப்பில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவிலின் பாரம்பரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, மேலாடை (சட்டை) அணியாமல், தோளில் சிவப்பு நிறச் சால்வை அணிந்தபடி அவர் கருவறைக்குச் சென்று அன்னை மூகாம்பிகையைத் தரிசித்தார். உலக நன்மைக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் நடைபெற்ற சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடுகளில் அவர் கலந்துகொண்டார்.
முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆன்மீகப் பயணத்தின் போது, கர்நாடக மாநிலச் சட்டப்பேரவை சபாநாயகரும், அம்மாநில அமைச்சருமான யு.டி.காதர் கோவிலுக்கு நேரில் வந்து அவரைச் சந்தித்து வரவேற்றார்.
அண்டை மாநில முதலமைச்சர் என்ற முறையில் அவருக்குக் கர்நாடக அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர் விஜய்யின் இந்தத் திடீர் ஆன்மீகப் பயணம் மற்றும் பாரம்பரிய வழிபாட்டுப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பரவி வருகின்றன.