மேகதாது அணை கட்ட அனுமதி கோரி மத்திய அமைச்சரிடம் கர்நாடக முதல்வர் மனு - தமிழக அரசுக்கு புதிய சவால்!

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்திற்குத் தேவையான இறுதி அனுமதிகளை விரைந்து வழங்கக் கோரி, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். இந்தத் திடீர் நகர்வு தமிழக விவசாயிகளிடையேயும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற டி.கே. சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தைத் தனது அரசின் முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். பெங்களூரு நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், கூடுதல் மின்சாரம் தயாரிக்கவும் இத்திட்டம் மிக அத்தியாவசியமானது என்பது கர்நாடக அரசின் வாதமாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மேகதாது திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய நீர் ஆணையத்தின்  இறுதி ஒப்புதல்களைக் காலதாமதமின்றி வழங்க வேண்டும் எனக் கோரி விரிவான மனு ஒன்றை அவரிடம் சமர்ப்பித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால், தமிழகத்திற்கு வர வேண்டிய மாதாந்திர மற்றும் வருடாந்திர காவிரியின் நீர் அளவு முற்றிலுமாகப் பாதிக்கப்படும் எனத் தமிழக அரசு ஆரம்பம் முதலே மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் இதனால் முற்றிலும் பாலைவனமாகும் அபாயம் உள்ளதாகத் தமிழக விவாசாய அமைப்புகள் எச்சரிக்கின்றன.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புகளுக்கு முரணாகக் கர்நாடக அரசு இத்திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில், கர்நாடக முதலமைச்சர் மத்திய அரசிடம் நேடியாக அனுமதி கோரியிருப்பது, தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் செயல் எனத் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவின் இந்த அதிரடி நகர்வை எதிர்கொள்ளவும், தமிழகத்தின் காவிரி உரிமைகளை நிலைநாட்டவும் தமிழக அரசு என்ன மாதிரியான சட்டப் பூர்வ மற்றும் அரசியல் உத்திகளைக் கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.