கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா - அமைச்சரவை விரிவாக்கத்தால் அதிருப்தி!
கர்நாடகத்தில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்து ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக 19 எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அமைச்சரவையில் தங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் கடும் அதிருப்தியடைந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர்களான யஷ்வந்தராயகவுடா பாட்டீல் (இண்டீ தொகுதி) மற்றும் பேரூர் கோபாலகிருஷ்ணா (சாகர் தொகுதி) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். தங்களது தலைவர்களுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, கர்நாடகாவின் பல பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்களும் ஆதரவாளர்களும் சாலையில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கட்சிக்குள்ளான இந்த அதிருப்தி குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் டி.கே.சிவகுமார், "எனக்கும் கடந்த காலங்களில் அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டபோது நான் அமைதி காத்து கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டேன். சட்டமன்றத்தில் 140-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இருக்கும்போது அனைவருக்கும் ஒரே நேரத்தில் அமைச்சர் வாய்ப்பு வழங்க முடியாது. எனவே தகுதியுள்ள மற்ற உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் வாய்ப்பளிக்கப்படும்; அனைவரும் பொறுமை காக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், மூத்த தலைவர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்காததால் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் புகைச்சல் தொடர்ந்து நீடித்து வருகிறது.