காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடக வனத்துறை மீது குற்றச்சாட்டு!
கர்நாடகா காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரை, மான் வேட்டையாடியதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் காவேரி வனவிலங்கு சரணாலய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள தோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த சிலர் மான் வேட்டையாடச் சென்றதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்த சாக்கியம் பகுதி வன அலுவலர்கள் அதிகாலையில் ரோந்து சென்றுள்ளனர்.
மரியமங்கலம் அருகே காட்டில் சிலர் துப்பாக்கியுடன் வேட்டையாடியதாகவும், அவர்களைச் சுற்றி வளைத்தபோது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் கர்நாடக வனத்துறை தெரிவித்துள்ளது. வனத்துறை ஊழியர் ஒருவர் காயமடைந்ததால் திருப்பிச் சுட்டதில் 3 பேர் உயிரிழந்ததாகக் கர்நாடக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தோணிசாமி (50), த/பெ. பெரியநாயகம் (ஜகன்னாததொட்டி), ஜான்ரோஸ் பீட்டர் (42), த/பெ. யாகூப் (மரியமங்கலம்), குமார் (33), த/பெ. சவேரியப்பன் (லாசர் தொட்டி) ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மரியமங்கலத்தைச் சேர்ந்த மகிமைதாஸ் (48, த/பெ. பெஞ்சமின்) என்பவர் இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மகிமைதாஸ் கொள்ளேகால் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக மைசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மைசூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து ஹனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன தங்களது மாடுகளைத் தேடியே அவர்கள் காட்டுக்குள் சென்றதாகவும், வனத்துறையினர் தங்களின் கொடூரச் செயலை மறைப்பதற்காக மான் வேட்டையாட வந்தார்கள் எனப் பொய்யான குற்றச்சாட்டையும் கதையையும் முன்வைப்பதாகப் பாதிக்கப்பட்ட பகுதி மக்களும் உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.