திருமணமான சில நாட்களில் மாயமான புதுப்பெண்! 8 நாட்களுக்கு பிறகு கால்வாயில் சடலமாக மீட்பு!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் 8 நாட்களாக மாயமான புதுப்பெண்ணின் உடல் ஹேமாவதி கால்வாயில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சிக்கநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 19-ம் தேதி இரவு ராஜசேகரும் பிரியங்காவும் ஹேமாவதி கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது பிரியங்கா திடீரென கால்வாயில் குதித்து விட்டதாகவும், அவரை காப்பாற்ற தானும் முயன்றதாகவும் ராஜசேகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் கால்வாயில் தீவிர தேடுதல் மேற்கொண்டனர். ஆனால், கால்வாயில் பலத்த நீர்வரத்து இருந்ததால் பிரியங்காவின் உடலை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே, பிரியங்காவின் பெற்றோர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தனர். தங்களது மகளை அவரது கணவர் ராஜசேகர்தான் கால்வாயில் தள்ளி கொலை செய்திருக்கலாம் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை தொடர்பாக பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டை ராஜசேகர் தரப்பினர் மறுத்துள்ளனர். பிரியங்காவுக்கு நீச்சல் தெரியும் என்றும், அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், ஹேமாவதி கால்வாயில் நீர்வரத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சரவணபெலகோலா அருகே கால்வாயில் பிரியங்காவின் உடல் மிதப்பது தெரியவந்தது. தொடர்ந்து 8 நாட்களாக நடைபெற்ற தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில் பிரியங்காவின் மரணத்துக்கான காரணம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுப்பெண் கால்வாயில் குதித்தது தற்கொலையா அல்லது அவர் திட்டமிட்டு கால்வாயில் தள்ளப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.