எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! தொழிலாளர் பலி - 9 பேர் காயம்!
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள மங்களூரு ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் புதன்கிழமை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்தனர்.மங்களூரு அருகே குட்டேத்தூர் பகுதியில் அமைந்துள்ள MRPL ஆலையின் Coker Hydrotreater Unit-ல் மதியம் சுமார் 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள உயர் அழுத்த Cold Separator பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாக MRPL நிறுவனம் தெரிவித்துள்ளது. வெடிப்பைத் தொடர்ந்து ஆலையில் தீப்பற்றி, கரும்புகை வெளியேறியது.விபத்தில் மணீஷ் கார்கரா (30) என்ற ஒப்பந்தத் தொழிலாளர் மாயமானதாக முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவரது உடல் தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், ராஜேஷ் (42) என்பவர் தீக்காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 8 பேருக்கும் காயம் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கிடையே, தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதிக்கப்பட்ட ஆலையின் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெடிவிபத்தின் தாக்கம் அருகில் உள்ள பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சில இடங்களில் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகவும், பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக MRPL நிர்வாகமும் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது.