2 மாதக் குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு கரு! மருத்துவர்களை வியக்க வைத்த அரிய பாதிப்பு
கர்நாடகா: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 2 மாத ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு கரு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய மருத்துவ நிலை மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குழந்தையின் வயிறு திடீரென வீங்கியதுடன், அவ்வப்போது வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர், ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். பரிசோதனையில் வயிற்றில் கட்டி போன்ற அமைப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், அது ‘பீடஸ் இன் பீடு’ (Fetus in Fetu) எனப்படும் அரிய நிலையாக இருக்கலாம் என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதுகுறித்து மருத்துவர் சிவராஜ் கூறுகையில், இரட்டை கருக்களில் ஒன்று மற்றொன்றின் உடலுக்குள் சிக்கிக்கொள்ளும் இந்த நிலை மிகவும் அரிதானது என்றார். மேலதிகப் பரிசோதனைகளுக்காகக் குழந்தை பல்லாரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அறுவை சிகிச்சை தேவையா என்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.