தாலிகட்டும் நேரத்தில் மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகள்... காதலனுடன் ஓட்டம்!

 

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி பகுதியில் அரங்கேறிய ஒரு சினிமா பாணி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஷிபாகான் என்ற இளம் பெண், ஒரு மருத்துவ மாணவரைக் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பெண்ணின் சம்மதம் இன்றி குடும்பத்தினர் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையைப் பார்த்துத் திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், தாலிகட்டும் முகூர்த்த நேரம் நெருங்கியது. மணப்பெண்ணை மேடைக்கு அழைக்க உறவினர்கள் சென்றபோது, அறையில் இருந்த ஷிபாகான் மாயமாகி இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் தனது மருத்துவக் காதலனுடன் திருமண மண்டபத்திலிருந்து தப்பியோடியது உறுதியானது.

இதனால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பெரும் எதிர்பார்ப்புடன் வந்த உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர், தனது மகளைக் காதலன் கடத்திச் சென்றுவிட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் காதலனுடன் ஓடிய சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.