பதவியேற்ற 2  நாளில் கர்நாடக அமைச்சர்  ராஜினாமா!

 

கர்நாடக மாநில அரசியலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் ராமலிங்க ரெட்டி. பெங்களூருவில் உள்ள பி.டி.எம். லே அவுட் தொகுதியில் இருந்து 8 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட   புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சர்கள் பதவியேற்ற 2  நாட்களுக்குப் பிறகு நேற்றிரவு இவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் ராமலிங்க ரெட்டிக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டது.

தனக்கு ஒதுக்கப்பட்ட இந்த இலாகாவில் ராமலிங்க ரெட்டி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கட்சித் தலைமை தனக்கு பெங்களூரு மேம்பாட்டுத் துறையை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் தற்போது அது வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டு தனக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாகவும்  வருத்தம் தெரிவித்துள்ளார். தனது மனசாட்சிக்கு எதிராகச் செயல்பட விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், இன்று தனது மந்திரி பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ராமலிங்க ரெட்டி, கட்சித் தலைமை மீதோ அல்லது மூத்த தலைவர்கள் மீதோ எனக்கு எந்தக் கோபமும் இல்லை என்று தெளிவாகக் கூறினார். தான் மந்திரி பதவியை மட்டுமே ராஜினாமா செய்வதாகவும், காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்து ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினராகத் தனது மக்கள் பணியைத் தொடரப் போவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்த திடீர் ராஜினாமா கர்நாடக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.