நடத்தையில் சந்தேகம்... தூங்கிய மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா கடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பர்குண்டா (வயது 39). வாகன ஓட்டியான இவருக்கும் ஷோபா (35) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஷோபா அருகில் உள்ள ஒரு பள்ளியில் உணவு சமைக்கும் வேலை செய்து வந்துள்ளார். பர்குண்டாவுக்குத் தினமும் மது குடிக்கும் தீய பழக்கம் இருந்ததால், அடிக்கடி வீட்டுக்கு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சம்பவத்தன்றும் பர்குண்டா வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியின் நடத்தையைப் பற்றிக் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகராறில் இருவருக்கும் இடையே சண்டையானது எல்லை மீறியதால், ஷோபாவை அவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதன் பின்னர் கோபம் தணிந்து இருவரும் உறங்கச் சென்ற நிலையில், நள்ளிரவில் திடீரென எழுந்த பர்குண்டா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ஷோபாவைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
கழுத்து மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த ஷோபா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தாயின் நிலையைப் பார்த்துக் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், அதானி காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஷோபாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தப்பியோடிய கணவர் பர்குண்டாவை அதிரடியாகக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.