பஞ்சாயத்தில் நேர்ந்த கொடூரம்: மனைவியைக் குத்திக் கொன்ற கணவன்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மல்லிகைபாய் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுஷ்மிதா (24). இவருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ் (30) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோன்ற ஒரு தகராறில் கோபித்துக் கொண்டு சுஷ்மிதா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மல்லிகைபாய் தொட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் ராஜேஷ், அவரது பெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் முப்பது பேருடன் சுஷ்மிதாவின் வீட்டிற்குப் பஞ்சாயத்து பேசி அழைத்துச் செல்ல வந்துள்ளனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையிலேயே கணவன், மனைவி இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவாதத்தின் போது ஆத்திரமடைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சுஷ்மிதாவின் கழுத்தில் ஆவேசமாகக் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய ராஜேஷ், கர்நாடக மாநில காவல் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்ததை அடுத்து, அவரைத் தளி காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.