"கருணாநிதி செய்த தவறு தான் காரணம்... மேகதாது விவகாரத்தில் மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது" - அமைச்சர் நிர்மல்குமார்
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பும் திமுக தலைவருக்கு விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மேகதாது அணை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த தவறே தற்போதைய பாதிப்புகளுக்குக் காரணம் என்று விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவின் நிலைப்பாடு: கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக்கூடாது என்பதில் பல ஆண்டுகளாகத் தெளிவாக இருக்கிறார்கள். நதிநீர் விவகாரத்தில் மாநில அரசுகள் நேரடியாக எதுவும் செய்துவிட முடியாது; ஒன்றிய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு இருக்கும் ஒரே தீர்வு உச்சநீதிமன்றத்தை அணுகுவது மட்டுமே.
ராகுல் காந்தி சொன்னால் தண்ணீர் வந்துவிடும் என்று கூறும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னர் காங்கிரஸோடு கூட்டணியில் இருந்தபோது என்ன செய்தார்? மேகதாது விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த வரலாற்றுத் தவறுதான் இன்றளவும் தமிழ்நாட்டிற்குப் பெரும் பாதிப்பாக உருவெடுத்துள்ளது.
வாட்ஸ்அப்பில் வரும் தகவல்களை வைத்துக்கொண்டு திமுக தலைவர் தவறான செய்திகளைப் பரப்புகிறார். மு.க. ஸ்டாலினுக்குத் தெளிவு தேவை. அவர் முதலமைச்சராக இருந்தபோதும் தெளிவில்லாமல் யாரோ சொல்வதைக் கேட்டு கையெழுத்துப் போட்டுச் செயல்பட்டார். மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறும் திமுக தலைவருக்குத் தேவைப்பட்டால் விளக்கம் அளிக்கத் தயார். நடத்தப்பட்ட ஆய்வில் வெறும் 50 புகார்களில் மட்டுமே மின் நுகர்வு கட்டணத்தில் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் கணக்கீட்டிற்காகப் புதிய பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், டிஜிட்டல் மீட்டர்களைப் பொருத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் வெறும் 543 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.