இன்று தங்கப் பல்லக்கில் மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்: கள்ளர் வேடம் பூண்டு வரும் கருப்பண்ணசாமி... வைகையாற்றில் இறங்கும் திருவிழா!
மதுரையின் பெருமைமிகு அடையாளமான சித்திரை திருவிழா சைவமும் வைணவமும் இணையும் உன்னத விழாவாக விமரிசையாக நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் முடிந்து தேரோட்டம் நடக்கவுள்ள நிலையில், அழகர் கோவிலில் நேற்று சித்திரை திருவிழா காப்புக்கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கிய அழகரின் பயணம் இன்று ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை தொடங்குகிறது. கள்ளர் வேடம் பூண்டு தங்கப் பல்லக்கில் அமர்ந்து மதுரை நோக்கி வரும் அழகரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை திசையில் காத்துக் கிடக்கின்றனர்.
இன்று மாலை மதுரை நோக்கிப் புறப்படும் அழகரை, நாளை ஏப்ரல் 30 ஆம் தேதி மதுரை மக்கள் திரண்டு வந்து எதிர்கொண்டு அழைக்கும் 'எதிர்சேவை' நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, மே 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
இந்த கண்கொள்ளாக் காட்சியைத் தொடர்ந்து, மே 2 ஆம் தேதி வண்டியூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய நடைபெறும் தசாவதாரக் காட்சிகளும் பக்தர்களுக்குப் பேரருளை அள்ளித் தரவுள்ளன.
அழகர் எழுந்தருளும் தங்கக் குதிரை, சேஷ வாகனம் மற்றும் கருட வாகனம் உள்ளிட்டவை ஏற்கனவே டிராக்டர்கள் மூலம் மதுரைக்குக் கொண்டு வரப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மே 3 ஆம் தேதி பூப்பல்லக்கு விழா நடைபெற்று, மே 4 ஆம் தேதி மதுரையில் இருந்து அழகர் மலை நோக்கித் திரும்புவார்.
மே 5 ஆம் தேதி அழகர் இருப்பிடம் சென்றடைவதுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறும். அழகரின் வருகையையொட்டி மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.