“கரூரில் பயங்கர கார் விபத்து! மரத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர்-மாணவி பலி - 3 பேர் படுகாயம்”
கரூரில் பயங்கர கார் விபத்து! மரத்தில் மோதி என்ஜினீயரிங் மாணவர்-மாணவி பலி - 3 பேர் படுகாயம்
கரூர் மாவட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் படுகாயமடைந்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவுதம் (21), தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது கல்லூரியில் படிக்கும் மதுப்பிரியா, காமினி, அனுசுயா, தேவதர்ஷினி ஆகிய 4 மாணவிகளுடன் காரில் கரூருக்கு சென்று கொண்டிருந்தார். காரை கவுதம் ஓட்டியுள்ளார்.
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கவுதமின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் பயங்கரமாக மோதியது.மோதலில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் படுகாயமடைந்த கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த 4 மாணவிகளும் படுகாயமடைந்தனர்.
விபத்தை பார்த்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த மாணவிகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் மதுப்பிரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காமினி, அனுசுயா, தேவதர்ஷினி ஆகிய 3 மாணவிகளும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வாங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கார் எதனால் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்-மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.