41 பேரை பலி வாங்கிய கரூர் கூட்ட நெரிசல் துயரம்... இன்றுடன் ஓராண்டு நிறைவு - நினைவு நாளில் அனுசரிக்கப்படும் சோக தினம்!
கரூரில் கடந்த ஆண்டு இதே நாளில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இச்சம்பவம் அரசியல் களத்திலும் பொதுவெளியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பல தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.