கருவூர் சித்தருக்கு சாப விமோசனம்... நெல்லையப்பர் கோவிலில் ஆவணி திருவிழா!
திருநெல்வேலி மாவட்டம், நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா தொடங்கிய நிலையில், மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து சுவாமி, கருவூர் சித்தருக்கு காட்சி தந்து சாப விமோசனம் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நெல்லையப்பர் கோவிலில் வருடந்தோறும் ஆவணி மூலத்திருவிழா நடைபெற்று வருகிறது. இது கருவூர் சித்தர் சாபம் கொடுத்தது, பின்னர் அவருக்கு காட்சி கொடுத்து சுவாமி சாப விமோசனம் பெற்ற வரலாற்று தொடர்புடைய திருவிழா ஆகும். கீரனூரில் அந்தணர் குலத்தில் சூரியன் அருளால் பிறந்தவர் கருவூர் சித்தர். கலைகள் முழுவதும் நன்றாக கற்று, தம்மையறிந்து, தலைவனை தம்முள்ளே கண்ட பெருமை உடையவர். மெய்ஞானியான அவர், சிவஸ்தலங்களுக்கு சென்று நல்வரம் கேட்டு பெற்று நெல்லைக்கு வந்து சேர்ந்தார்.
நெல்லையப்பரை தரிசிக்க வந்த நேரம், அவரிடம் இருந்து மறுமொழி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கருவூர் சித்தர் "ஈசன் இங்கு இல்லை, அதனால் இங்கு எருக்கு எழ" என்று சாபமிட்டுவிட்டு, மானூரை சென்றடைந்தார். இதையடுத்து நெல்லையப்பர் ரிஷப ராகனத்தில் ஏறி ஆவணி மூல நாளில் மானூருக்கு வந்து சித்தருக்கு காட்சி கொடுத்து சாப விமோசனம் பெற்றார் என்பது வரலாறு ஆகும்.
அதன்படி ஆண்டு தோறும் ஆவணி மூலத்திருநாள் அன்று நெல்லையப்பர், பரிவார மூர்த்திகளுடன் மானூருக்கு எழுந்தருளி, கருவூர் சித்தருக்கு காட்சி அளிக்கும் விழா நடைபெறுகிறது.
இன்று ஆவணி துவங்கிய நிலையில், ஆவணி மாத மூல நட்சத்திரத்தன்று கருவூர் சித்தர் மானூரில் எழுந்தருளுகிறார். ஆவணி மூலத்திருவிழா தினத்தன்று மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து சுவாமி, கருவூர் சித்தருக்கு காட்சி தந்து சாப விமோசனம் நிவர்த்தி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரலாற்று புகழ் மிக்க ஆவணி மூலம் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.