பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பரிதாப பலி!

 

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தேர்தல் நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ரவாலகோட், மீர்பூர் மற்றும் முசாஃபராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரமான தாக்குதலில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட 20 அப்பாவிப் பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

allowfullscreen

ஜாயிண்ட் அவாமி ஆக்சன் கமிட்டி அமைப்பின் தலைமையில் இந்த மிகப்பெரிய தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடினர். ஆனால் பாகிஸ்தான் அரசு பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் கொடூரமான அடக்குமுறையைக் கையாண்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவ இடங்கள் முழுவதும் பிணக்கூளமாகவும் காயமடைந்தவர்களின் அலறல் சத்தங்களாலும் நிறைந்து காணப்பட்டன.

 

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.பாகிஸ்தான் ராணுவத்தின் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீதிகளில் பலியானவர்களின் உடல்கள் கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னரும் அப்பகுதியில் பதற்றமான சூழலே நீடித்து வருவதால் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் கொடூரத் தாக்குதலையும் மீறி பொதுமக்கள் தொடர்ந்து வீதிகளில் இறங்கிப் போராடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.