காசிமேட்டில் சோகத்தில் முடிந்த மீனவர்களின் கடல் பயணம்… 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

 

 

சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஆந்திரக் கடற்பகுதியில் புயலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் சென்னை காசிமேட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த அக்டோபர் 29-ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் ஒரே விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வங்கக்கடலில் முரசு புயல் தீவிரமடைந்ததால், பாதுகாப்பு கருதி ஆந்திர மாநிலம் நிஸாம்பட்டினம் துறைமுகத்தில் படகை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் நவம்பர் 3-ம் தேதி ராமாயப்பட்டினம் நோக்கிச் சென்றபோது, கடுமையான புயல் காற்றில் படகின் என்ஜின் பழுதடைந்து நடுக்கடலில் கவிழ்ந்ததாகத் தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து மீனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ஆந்திராவின் கோத்தப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட எஸ். மோகன் (47), ஏ. முருகன் (48), சி. விஜயகாந்த் (44), குப்புசாமி (58) ஆகியோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த மற்ற மீனவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது