காசிமேட்டில் மீனவர்கள் போராட்டம்: 800 படகுகள் கடலுக்கு செல்லவில்லை!
ஆந்திர கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 8 படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, சென்னை காசிமேட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று சுமார் 800 படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி ஆந்திர கடலோர காவல்படையினர் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 8 படகுகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி காசிமேட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
போராட்டத்தின் காரணமாக காசிமேட்டில் இருந்து சுமார் 800 படகுகள் இன்று மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் வரத்து குறைந்து, சந்தையில் மீன்களின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.