மதுபோதையில் நண்பர்களுடன் தகராறு… சென்னையில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை!
சென்னை காசிமேடு பகுதியில் மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. இதில் பிரபல ரவுடி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசிமேடு சிங்காரவேலன் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த தீபக் (28), அப்பகுதியில் பிரபல ரவுடியாக அறியப்பட்டவர். இவர் மீது காசிமேடு காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் 10-ம் தேதி மாலை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள காலி இடத்தில் தீபக் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபக்கின் தலையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக ஜெயசீலன், ஜெயச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.