வாகன ஓட்டிகளே கவனம்! இன்று முதல் 15 நாட்களுக்கு டிராபிக் மாற்றம்!

 

 

சென்னையில் காசிமேடு சிக்னல் அருகே கழிவுநீர் குழாய் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (அக்.1) முதல் 15 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காசிமேடு சிக்னல் அருகே உள்ள எஸ்.என். செட்டி சாலை - ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் பழுதடைந்த கழிவுநீர் குழாயை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்தை மாற்றி அமைக்க சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, எஸ்.என். செட்டி சாலை - ஜீவரத்தினம் சாலை சந்திப்பு வழியாக எண்ணூர் நோக்கிச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஜீவரத்தினம் சாலை, வி.பி. கோவில் தெரு, டி.எச். சாலை வழியாக திருப்பி விடப்படும். பின்னர் டி.எச். சாலை சுங்கச்சாவடி சந்திப்பு வழியாக தங்களது இலக்கை அடையலாம்.

எண்ணூர் நோக்கிச் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களும் ஜீவரத்தினம் சாலை, வி.பி. கோவில் தெரு, டி.எச். சாலை வழியாக மாற்றி விடப்படும். இந்த வாகனங்கள் டி.எச். சாலையில் மெட்ரோ ரெயில் தூண் எண் 12 அருகே யூ-டர்ன் எடுத்து, பாலகிருஷ்ணா தெரு வழியாக செல்ல வேண்டும்.அதேபோல், எண்ணூரிலிருந்து பாரிமுனை நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எஸ்.என். செட்டி சாலை - பவர் குப்பம் சந்திப்பு பகுதியில் எதிர்த்திசை சாலைக்கு திருப்பி விடப்படும்.

அங்கிருந்து இடதுபுறமாக திரும்பி, எஸ்.என். செட்டி சாலை - காசிமேடு சிக்னல் சந்திப்பு வழியாக தங்களது இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கழிவுநீர் குழாய் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் சுமார் 15 நாட்களுக்கு அமலில் இருக்கும். எனவே காசிமேடு, எண்ணூர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி, போக்குவரத்து போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.