கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா தொடங்கியது... பக்தி பரவசத்தில் இந்திய, இலங்கை மக்கள்!
கச்சத்தீவில் உலகப்புகழ் பெற்ற புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி, இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்களும், பக்தர்களும் எல்லையற்ற அன்புடன் சந்திக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. நேற்று மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை பக்திநாதன் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மற்றும் ராமேசுவரத்தைச் சேர்ந்த முக்கியப் பங்குத்தந்தையர்கள் முன்னிலை வகித்தனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை மற்றும் புனித அந்தோணியார் தேரோட்டம் ஆகியவை நடைபெற்றன. இதில் இரு நாடுகளையும் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று பிப்ரவரி 28 காலை இருநாட்டுப் பங்குத்தந்தையர்கள் இணைந்து நடத்தும் சிறப்புக் கூட்டுத் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. இதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடையும்.
தமிழகத்திலிருந்து 92 விசைப்படகுகள் மற்றும் 26 நாட்டுப்படகுகள் என மொத்தம் 118 படகுகளில் 3,741 பக்தர்கள் கச்சத்தீவு சென்றுள்ளனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இவர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் தமிழக மெரைன் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கச்சத்தீவில் பக்தர்களுக்காகக் குடிநீர், தற்காலிக கழிவறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை இலங்கை அரசுடன் இணைந்து விழாக்குழுவினர் செய்துள்ளனர். சமீபத்தில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையில் உயிரிழந்த தமிழக மீனவர் மலைச்சாமிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழக மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கச்சத்தீவு சென்றது குறிப்பிடத்தக்கது.